மகாவிஷ்ணு இழந்த தமது சக்கரத்தைத் திரும்பப் பெற சிவபூஜை செய்து வழிபட்ட தலமாதலால் 'சக்கரப்பள்ளி' என்று பெயர் பெற்றது. அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்ததால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
மூலவர் 'சக்கரவாகேஸ்வரர்' 'ஆலந்துறைநாதர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'தேவநாயகி', 'அல்லியங்கோதை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் இருப்பது போல், இந்த ஊரை மையமாக வைத்து 'சப்த மங்கை' தலங்கள் உள்ளன. இந்த ஏழு ஊர்களும் சப்த மாதர்கள் சிவபெருமானை வழிபட்ட தலங்களாகும். புள்ளமங்கை, தாழைமங்கை, பசுபதிமங்கை, நந்திமங்கை, சூலமங்கை, அரிமங்கை ஆகியவை மற்ற தலங்களாகும். இதில் புள்ளமங்கை தவிர மற்ற ஐந்து தலங்களும் பாடல் பெற்ற தலங்கள் அல்ல.
பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தியன்று சூரியனின் கதிர்கள் சுவாமி மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.
இக்கோயிலைச் சுற்றி பெரும்பாலும் இந்துக்களே இல்லை. முஸ்லீம்களே வசிக்கின்றனர்.
இந்திரன் மகனான ஜயந்தன், தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர். கோயில் காலை 9 மணி முதல் மதியம் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|